Skip to main content

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு 187 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் -- நாராயணசாமி கோரிக்கை! 

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
kl

 

கஜா புயலால் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.   அதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் சட்டசபையில் இன்று நடைபெற்றது.

 

அமைச்சர்கள்,  அரசுத்துறை செயலர்கள் கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட பாதிப்புகள் குறித்து காணொளி காட்சி மூலம் நேரடியாக தகவல்களை கேட்டறிந்தனர். 

 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ’’கஜா புயல் காரணமாக காரைக்கால் மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு போக முடியாத நிலை உள்ளதால்  அவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. 

 

புயலால் பாதிக்கப்பட்ட 9,500 குடிசைகளில் வாழும் குடும்பத்திற்கு தலா 2 ஆயிரம் ரூபாயும், முழுமையாக பதிப்பு அடைந்த 1,500 குடிசைகளுக்கு தலா 4,100 ரூபாயும் வழங்கப்படும். மீனவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபாய் 64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களின் பதிப்பு குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு நிதி வழங்கப்படும்.

 

பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.   மத்திய அரசுக்கு இடைக்கால அறிக்கை தயார் செய்து நாளைய தினம் அனுப்ப உள்ளோம்.  நிவாரணம் வழங்குவது தொடர்பாக வரும் 22-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்திக்க நேரம் கேட்கப்ட்டுள்ளது.   மத்திய அரசு முதலில் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 

 

மத்திய அரசு குழு அனுப்பி சேதத்தை கணக்கிட்டு முழு நிவாரணம் வழங்க வேண்டும், காரைக்காலுக்கு புயல் பாதிப்புக்கு முழு நிவாரண நிதியாக ரூ.187 கோடி வழங்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மக்களுக்கு பொதுமக்கள் முடிந்த அளவு மருந்து, உடைகள் உள்ளிட்ட பொருட்களை தாராளமாக வழங்க வேண்டும். நிதியாக வழங்க விரும்புவோர் முதல்வர் நிவாரண நிதி மூலம் வழங்க வேண்டும்’’என்று  தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
Fishermen went into the sea to struggle to fulfill their demands

மீன்பிடி துறைமுகம் அமைத்துத் தர வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதால் காரைக்காலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு, தங்கள் பகுதியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வலியுறுத்தியும், குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வலியுறுத்தியும், அரசால் 2009 இல் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் ஐஸ் பிளான்ட்டை உடனடியாக அரசு திறக்க வலியுறுத்தியும் மீனவர்கள் கடந்த 25 ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் இன்று பட்டினச்சேரி கடற்கரையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய -  மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் மீனவப் பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

‘தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும்’ - வானிலை ஆய்வு மையம் கணிப்பு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Rains will continue in TN for the next 7 days Meteorological Department forecast

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும். அதன்படி தமிழகத்தில் மிதமான மழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமான மழை பெய்யும். சென்னையில் மழை தொடரும். தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று (08.01.2024) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. நாளை (09.01.2024) மற்றும் நாளை மறுநாள் (10.01.2024 கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கும், அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகத் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (08.01.2024) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். அதே சமயம் தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதோடு நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு வெளியாகி இருந்தது.

மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று (08.01.2024) நடைபெற இருந்த தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டன. அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனச் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கும் இன்று (08.01.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.