ஈரோட்டிலிருந்து மாறுதலாகி நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக இரண்டு மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார் இளம் எஸ்.பி.யான சக்தி கணேசன்.
குற்றச் சம்பவங்கள் நடைபெறாத பகுதியாக நாமக்கல் மாவட்டம் இருக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கி வரும் சக்தி கணேசன் நேரடியாகவும் அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறார். அப்படி ஒன்று தான் 16 ஆம் தேதி இரவு சூதாட்ட கும்பல் பிடிபட்ட சம்பவம்.
திருச்செங்கோடு பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 நபர்கள் கைது செய்யப்பட்டதோடு ரூபாய் 9.71 லட்சமும் இரண்டு சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராயர்பாளையம், புதுக்காடு, நல்லையகவுண்டர் காட்டில் தான் இந்தச் சூதாட்டம் தொடர்ந்து நடைபெற்றுளது. இது பற்றிய தகவல் எஸ்.பி சக்தி கணேசனுக்கு செல்ல திருச்செங்கோடு ஊரக காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையில் தனிப்படை அமைத்தார்.
அந்தத் தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், அந்தப் பகுதியில் 'பணம் வைத்து வெட்டு' என்கிற சூதாட்டத்தில் ஈடுபட்ட சேலத்தை ராமன், வேலன், அசோகன், பெருமாள், முத்து மற்றும் கோவையைச் சேர்ந்த தனசேகர், ராஜா, அருண் ஆகிய எட்டு பேர் சுற்றி வளைத்துக் கைது செய்ய்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து பணம் ரூபாய் 9,71, 200 பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. எஸ்.பி. சக்தி கணேசனின் இந்த அதிரடி நடவடிக்கை போலீசார் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.