நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிவலசையைச் சேர்ந்த ஜோதிடர் கந்தசாமி (50). இவருடைய மகள் வெள்ளையம்மாள் (21). இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது.
திருமணம் ஆன 3 மாதத்திலேயே கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின், பெற்றோர் வீட்டில் வெள்ளையம்மாள் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், கொசவம்பட்டி அன்னை செட்டியார் நகரைச் சேர்ந்த ஜோதிடர் முத்து (25) என்பவருடன் வெள்ளையம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து முத்து, வெள்ளையம்மாளை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அடிக்கடி வெள்ளையம்மாளிடம் பணமும் பறித்து வந்துள்ளார். அவரையே முழுவதுமாக நம்பிய வெள்ளையம்மாள், முத்து பணம் கேட்கும்போதெல்லாம் தனது நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு, முத்துவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெள்ளையம்மாள் வற்புறுத்தி உள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ள முடியாது என முத்து மறுக்கவே, இதுவரை தான் கொடுத்த பணம், நகைகள் எல்லாவற்றையும் உடனடியாக கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.
வெள்ளையம்மாள் உயிருடன் இருந்தால்தானே தன்னை தொந்தரவு செய்வார் என்று கருதிய முத்து, அவரை ஒரேயடியாக தீர்த்துக்கட்ட முடிவு செய்து, வெள்ளையம்மாளை செல்போனில் தொடர்பு கொண்டு, திருச்சி அருகே உள்ள தொடையூருக்குச் சென்று ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். அதை நம்பி கடந்த 11.1.2020ம் தேதி முத்துவுடன் தொடையூருக்குச் சென்றார் வெள்ளையம்மாள்.
அங்கே, ஒரு கல்லூரி அருகே உள்ள ஆற்றங்கரை ஓரம் நின்று இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர். தொடையூர் சென்ற பிறகு, வெள்ளையம்மாளை திருமணம் செய்ய கொஞ்சமும் விருப்பம் இல்லை என்று முத்து கூறியிருக்கிறார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு வெடித்தது. ஏற்கனவே அவரை தீர்த்துக் கட்டும் திட்டத்துடன்தான் தொடையூருக்கு வரவழைத்திருந்தார் முத்து.
அதனால் தான் தயாராக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளையம்மாளை கழுத்து அறுத்து படுகொலை செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். அத்தோடு நில்லாமல், வெள்ளையம்மாளின் சடலத்தை ஆற்றங்கரையோரமாக குழி தோண்டு புதைத்துவிட்டு ஏதும் அறியாதவர் போல சொந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார் ஜோதிடர் முத்து.
வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற மகள், மறுநாள் ஆகியும் வராததால் சந்தேகம் அடைந்த வெள்ளையம்மாளின் தந்தை கந்தசாமி, திருச்செங்கோடு புறநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வெள்ளையம்மாளுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து அவருடைய செல்போன் நம்பரை வைத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
காவல்துறையினரின் பிடி இறுகுவதை அறிந்த முத்து, ஜன. 13ம் தேதி இரவு 9 மணியளவில், திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிர்வேலிடம் சரணடைந்தார். வட்டாட்சியர் அவரை, காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில், ''வெள்ளையம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தினார். அதற்கு மறுத்ததால், என்னிடம் கொடுத்த நகை, பணத்தைத் திருப்பிக் கேட்டார். இல்லாவிட்டால் காவல்துறையில் புகார் செய்து விடுவேன் என்றும் அச்சுறுத்தினார். இதனால் அவரை திட்டமிட்டு கொலை செய்தேன்,'' என்று ஜோதிடர் முத்து வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
அவருடைய வாக்குமூலத்திற்குப் பிறகே வெள்ளையம்மாள் கொன்று புதைக்கப்பட்ட விவரம் காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது. அதன்பிறகு தொடையூர் காவல்துறைக்கு தகவல் அளித்த திருச்செங்கோடு புறநகர் காவல்துறையினர், சடலத்தை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்ணை ஜோதிடரே கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.