நல்லாண்டார்கொல்லை, வடகாட்டில்
மறு போராட்டத்திற்கு தயாராகும் மக்கள்!
நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு ஆகிய இடங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால் எண்ணெய், எரிவாயு எடுக்க அமைக்கப்பட்டு செயல்படாமல் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை மூடி கொடுப்பதாக மாவட்ட நிர்வாகம் சொன்ன காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் இன்னும் எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு, மற்றும் எண்ணெய் எடுக்க கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ந் தேதி ஒரு தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த தகவல் வெளியான நிலையில் நெடுவாசல் சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் பல்வேறு தன்னார்வ அமைப்பகள், இயற்கை, சுற்றுசூழல் காக்கும் அமைப்புகள், திரை நட்சத்திரங்கள், விவசாய சங்கங்கள் என்று பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 22 நாட்களுக்கு பிறகு மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் நல்லாண்டார்கொல்லை, கோட்டைக்காடு, வடகாடு, வாணக்கன்காடு, கருக்காகுறிச்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒ.என்.ஜி.சி. எண்ணெய் ஆழ்குழாய் கிணறுகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள், குழந்தைகள் விவசாயிகள் என அனைவரும் போராட்டப் பந்தல் அமைத்து அமைதி வழி போராட்டங்களை தொடங்கினார்கள். இந்த போராட்டம் தமிழக அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் கோரிக்கையை ஏற்பதாக தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எழுதிக் கொடுத்தது.
அதாவது.. ஒ.என்.ஜி.சி. நிறுவனம் நில ஒப்பந்தம் செய்துள்ளதை ரத்து செய்து மறு சீரமைப்பு செய்து ஒப்படைக்க வேண்டும் என்பதை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு உடன் பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆழ்குழாய் கிணறு மற்றும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளதை அகற்றவும், மேற்படி ஆழ்குழாய் கிணறு மற்றும் தொட்டியை மூடவும் இது தொடர்புடைய நிறுவனத்திற்கு பரிந்துரை செய்து 9 மாத காலத்திற்குள் இப்பணியினை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசாணை எண் (டி) 186 தொழிற்சாலைகள் (எம்.எம்.ஏ 1) துறை நாள் 8.10.2015 - படி காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுப்பதற்கும், எடுக்கும் நடவடிக்கை கைவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மீத்தென் வாயு எடுப்பதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த நிறுவனத்திற்கும் அனுமதி வழங்காது எனவும் தெரிவிக்கிறது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீட்டின் (1.3.2017) அடிப்படையில்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைக்காடு, வடகாடு, நல்லாண்டார்கொல்லை, விவசாயிகளின் வாழிவாதாரம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்பதாலும், கிராமத்திற்கு சுற்றுசூழல் பாதிப்பு என்பதாலும், கிராமத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் எந்த நிறுவனத்திற்கும் மாவட்ட நிர்வாகம் உரிய அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இப்படி தான் கோட்டைக்காடு கிராம போராட்டக்குழுவுக்கு மார்ச் 4 ந் தேதியும், வடகாடு போராட்டக்குழுவுக்கு மார்ச் 27 ந் தேதியும் மாவட்ட ஆட்சியர் கணேஷ் போராட்டக் களத்திற்கே வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு உறுதிமொழி எழுதிக் கொடுத்தார்.
ஆனால் டிசம்பர் மாதத்துடன் 9 மாத கால அவகாசம் முடிந்துவிட்டது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சொன்னது எதையும் செய்யவில்லை. ஆழ்குழாய் கிணறுகளை அகற்றவும், நிலத்தை மறு சீரமைக்கவும் எந்த பணியையும் தொடங்கவும் இல்லை என்று கூறும் பொதுமக்கள் நடவடிக்கை இல்லாத நிலையில் மறு போராட்டத்திற்கு மக்கள் தயாராக உள்ளனர் என்றனர்.
-பகத்சிங்