![school](http://image.nakkheeran.in/cdn/farfuture/8_t0LpmtBbgCTFjKmuKEe9_wNzt6nX5LzxQhpsD28bc/1533347676/sites/default/files/inline-images/school.jpg)
"மாணவர்கள் சேர்க்கையில் சாதித்த அரசுப் பள்ளி: ஆசிரியர்கள், வகுப்பறைகள் பற்றாக்குறை! திரும்பிப் பார்ப்பாரா அமைச்சர்?" என்ற தலைப்பில் ஜூலை 3 ந் தேதி நக்கீரன் இணைய தளத்தில் சிறப்பு செய்தி வெளியிடப்பட்டது. அந்த செய்தியின் தாக்கம் அந்தப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியரை மாவட்ட கல்வி நிர்வாகம் நியமித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலைத் தொகுதியில் உள்ள அன்னவாசலில் இயங்கும் சமஸ்தான காலத்து தொடக்கப்பள்ளியில் இந்த ஆண்டு முதல் வகுப்பில் மட்டும் 88 மாணவர்களும் இதர வகுப்புகளையும் சேர்த்து 131 மாணவர்களையும் சேர்த்து சாதனை படைத்த அரசுப் பள்ளியில் மொத்தம் 410 மாணவர்களுடன் இயங்கி வருகிறது.
இத்தனை மாணவர்களை சேர்த்த பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களை பெற்றோர்கள் விழா நடத்தி பாராட்டினார்கள். ஆனால் அந்தப் பள்ளியில் 3 ஆசிரியர்களும் 3 வகுப்பறைகளும் பற்றாக்குறையாக உள்ளனர் என்பதையும் தினசரி அந்த வழியாக செல்லும் அமைச்சர் கவனிக்க வேண்டும் என்பதையும் தான் நக்கீரன் இணையதளத்தில் சிறப்பு செய்தியாக வெளியிட்டிருந்தோம்.
செய்தி வெளியானதும் மாவட்ட, ஒன்றிய கல்வி அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்து விரைவில் ஆசிரியர்கள், கூடுதல் வகுப்பறைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா உத்தரவின் பேரில் வட்டார கல்வி அலுவலர் பொன்னழகு கடந்த 5 ந் தேதியே வேறு பள்ளியில் இருந்து இரு இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப் பணியில் செல்ல உத்தரவு பிரப்பித்தார். இன்று 9 ந் தேதி மாற்றுப்பணிக்கு செல்ல இருந்த நிலையில் ஒரு மாற்றுப்பணி ஆசிரியர் பணியாற்றிய பள்ளியில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை வந்ததால் அந்த ஆசிரியர் மாற்றுப் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் இலுப்பூர் தொடக்கப்பள்ளியில் இருந்து இன்னாசி எட்வின் அலெக்ஸ் என்ற ஒரு இடைநிலை ஆசிரியர் மட்டும் அன்னவாசல் தொடக்கப்பள்ளிக்கு வந்து மாற்றுப்பணியில் பொருப்பேற்றுக் கொண்டார்.
ஆசிரியர் பற்றாக்குறையில் ஆசிரியர் கிடைத்திருப்பதால் மாணவர்களும் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் மொத்தம் உள்ள 3 இடங்களுக்கும் நிரந்தர பணியில் ஆசிரியர்களை நியமிப்பதுடன் வகுப்பறைகளும் கிடைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்கின்றனர் பெற்றோர்கள்.
உடனடி நடவடிக்கை எடுத்த கல்வித்துறையை பாராட்டுவோம்.