Skip to main content

நிர்வாணமாக்கி சட்டவிரோத காவல்! அதிகாரிகளுக்கு தண்டனை!

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
arrest


லாரி திருடியதாக பி.டெக்., பட்டதாரியை கைது செய்து, சட்டவிரோதமாக ஐந்து நாட்கள் சிறை பிடித்து நிர்வாணமாக்கி தாக்கி துன்புறுத்திய சிவகங்கை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் இருவருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பி.டெக்., பட்டதாரி மணிகண்டன், சொந்தமாக இரு டிராக்டர்கள் வைத்திருக்கிறார். இந்த டிராக்டர்கள் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்று வந்தார். இந்நிலையில், 2010ம் ஆண்டு காலை கரும்பு ஏற்ற காத்திருந்த மணிகண்டனை, சிவகங்கை காவல் நிலைய உதவி ஆய்வாளர் வடிவேல் முருகன், எந்த தகவலும் கூறாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ஆய்வாளர் நந்தகுமாரின் தூண்டுதலின் பேரில், மணிகண்டனை நிர்வாணமாக்கி, தாக்கி துன்புறுத்தியுள்ளார். கடைசியாக லாரி திருடிய வழக்கில் கைது செய்துள்ளதாகக் கூறி, ஐந்து நாட்கள் வரை சட்டவிரோதமாக சிறை வைத்து விட்டு, பின் உண்மையான திருடனை கண்டுபிடித்து விட்டதாக மணிகண்டனை விடுவித்துள்ளனர்.

இதையடுத்து, மணிகண்டன், தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், கைது செய்யப்பட்ட மணிகண்டனை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், சட்டவிரோதமாக சிறை பிடித்து, சித்ரவதை செய்த ஆய்வாளர் நந்தகுமார், உதவி ஆய்வாளர் வடிவேல் முருகன் ஆகியோருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தொகையை, பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கு இழப்பீட்டாக வழங்கவும், இரு காவல் துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

சார்ந்த செய்திகள்