மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற காவலர் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவரை கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர் காவல்துறையினர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து நள்ளிரவில் மணல் கொள்ளை நடப்பதாக பொதுமக்களிடமிருந்து, போலீசாருக்கு புகார்கள் வந்தவண்ணமே இருந்தன. ஆனாலும் போலீசார் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிவந்தனர்.
இந்தச் சூழலில், மணல் கொள்ளை தீவிரமானது. அதனால், திருட்டில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்தனர். கடந்த மாதம் 17ஆம் தேதி கரியாப்பட்டினம் அருகே, நள்ளிரவில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மணல் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பி ஓடினர். இந்த சம்பவத்தில் தனிப்படை போலீசார் டீன் என்பவர் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, மணல் திருட்டைத் தடுக்கச் சென்ற காவலர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடிய வேதாரண்யம் அடுத்துள்ள கரியாப்பட்டினம் கவுண்டர்மேட்டைச் சேர்ந்த சக்திவேல், கத்திரிபுலம் கோவில்குத்தகையைச் சேர்ந்த கோபிநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்திருந்தனர்.
தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நாகை எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று (14.05.2021) இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.