நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் ஏழை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதாம் உசேன். மெக்கானிக் வேலை செய்து வரும் இவர் நேற்று பணி முடிந்ததும் தனது இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார். வழக்கம் போல் காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அதனை தொடர்ந்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது முகத்தில் மாஸ்க் அணிந்தபடி வாகனத்தில் வரும் இரு இளைஞர்கள் அவர்களது வண்டியை அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு பின்னர் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியின் பூட்டை உடைத்து வண்டியை அங்கிருந்து திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து சதாம் உசேன் தனது பைக்கை திருடி சென்ற திருடர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து அதனை மீட்டு தருமாறு வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நாகையில் நள்ளிரவில் முக கவசம் அணிந்து வரும் இரு வாலிபர்கள் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அங்கிருந்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.