Skip to main content

ஆக்சிஜன் தடையால் நோயாளி உயிரிழப்பா? நாகையில் பரபரப்பு!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

NAGAI HOSPITAL INCIDENT

 

நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளி ஒருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

 

நாகை, நாகூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அங்கு தனியார் வங்கியில் பணிபுரிந்துவருகிறார். இவர், கடந்த 12ஆம் தேதி கரோனா தொற்று காரணமாக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவரது உடல்நிலை படிப்படியாக தேறிவந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

நேற்று (23.06.2021) இரவு ராஜேஷ், அவரது மனைவி மகள்களுடன் வீடியோ கால் மூலமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில், சில மணி நேரம் கழித்து ராஜேஷ் இறந்ததாக தகவல் வந்துள்ளது. மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதால், ஆக்சிஜன் சற்று நேரம் நிறுத்தப்பட்டதன்  காரணமாக ராஜேஷ் உயிரிழந்ததாக குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.  ராஜேஷின் உயிரிழப்புக்கு நாகை அரசு மருத்துவமனையே காரணம் எனவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

ஆனால் இதுகுறித்து மருத்துவமனை டீன், “கரோனா தீவிரமடைந்ததால்தான் ராஜேஷ் இறந்துள்ளார். ஆக்சிஜன் நிறுத்தம் காரணமல்ல” என விளக்கம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்