சேலத்தில், பணம் இரட்டிப்பு ஆசை காட்டி மருத்துவரிடம் 23.35 லட்சம் ரூபாய் பறித்த மர்ம கும்பல் குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.
சேலம் ராஜாஜி சாலையைச் சேர்ந்தவர் ஜெகதீசன், மருத்துவர். இவர், அம்மாபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றிவருகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம், இவருடைய அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், நீங்கள் முதலீடு செய்யும் பணத்தைக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாகப் பெறலாம் என கூறப்பட்டிருந்தது. மேலும், இண்டன் என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.
இதை நம்பிய மருத்துவர் ஜெகதீசன், அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்துகொண்டார். செயலியில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கிக் கணக்கு எண்ணிற்குக் கடந்த இரண்டு மாதமாக ஜெகதீசன், மொத்தம் 23.35 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
ஆனால், தன்னுடைய முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக்கித் தரப்படவில்லை என்றதோடு, திடீரென்று குறுந்தகவல் அனுப்பிய நபரிடமிருந்து மேலதிக தகவல் வருவதும் நின்று போனது. இதனால் சந்தேகமடைந்த ஜெகதீசன், செயலியில் குறிப்பிட்டிருந்த அலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தன்னுடைய பணத்தைக் திருப்பிக் கேட்டுள்ளார்.
எதிர்முனையில் பேசிய நபரோ, பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டுமென்றால் வருமானவரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும். அதற்காக மேலும் 5 லட்சம் ரூபாய் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்தே, தான் வசமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஜெகதீசன், சேலம் மாநகர சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகாரளித்தார். ஆய்வாளர் சந்தோஷ்குமார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்.
மோசடியில் ஈடுபட்ட கும்பல், 6 வெவ்வேறு வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கூறுகையில், ''அலைபேசியில் யாராவது தொடர்புகொண்டு வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, வங்கி கணக்கு எண், ஏடிஎம் ரகசிய எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைக் கேட்டால், அவற்றைக் கொடுக்க வேண்டாம்.
மக்களுடைய ஆசையைத் தூண்டும் தேவையில்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மோசடி ஆசாமிகள் நம்மிடம் இருந்து பணத்தைப் பறித்துக்கொள்வார்கள். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என்றனர்.