பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக முரசொலி அறக்கட்டளைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தேசிய பட்டியலின ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று குற்றம் சாட்டி தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியலின ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 14 மற்றும் டிசம்பர் 13 ஆம் தேதிகளில் தேசிய பட்டியலின ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி முரசொலி அறக்கட்டளை தரப்பில் 2020 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் இயக்குநர் சாஹு ரவிவர்மன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பஞ்சமி நில விவகாரம் பட்டியலின நலன் சம்பந்தப்பட்டது என்பதால் ஆணையம் விதிகளின்படி விசாரணை நடத்தியுள்ளதாகவும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின மக்களின் நலன்களை பாதுகாக்க உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை பெற்ற அரசியல் சாசன அமைப்பான ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டதால் நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கில் இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை ஜூலை 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டுள்ளார்.