காணாமல் போன சுற்றுசூழல் ஆர்வலர் தோழர் முகிலன் இருப்பிடம் தேடி போலீசார் பல குழுக்கள் அமைத்து தேடிவருகிறார்கள். இந்த நிலையில் தோழர் முகிலனின் தொடர்பில் உள்ள அமைப்புக்களை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மனைவி பூங்கொடி மற்றும் காணாமல் போனதாக வழக்கு கொடுத்த லயோலா மணி மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த பொன்னரசு மேலும் காவிரி ஆறு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பு நிர்வாகிகளில் ஒருவரான இசை என்கிற ராஜேஸ்வரி தொடர்ந்து பல்வேறு நிர்வாகிகளை போலீசார் விசாரித்து வந்தனர்.
இதனிடையில் முகிலனை கண்டுபிடித்து ஆஜர் படுத்தக்கோரி மக்கள் சிவில் உரிமை கழகம் ( பியூசிஎல்) உயர்நீதிமன்றத்தில் தொடுத்த ஆட்கொணர்வு மனு மீதான இரண்டாவது விசாரணை நாளை 4 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வர உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில் முகிலன் எங்கு சென்றார். யாரால் கடத்தப்பட்டார். அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் 4 ஆம் தேதி ஆஜர் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக நாளை ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றத்தில் முகிலனை போலீசார் ஆஜர் படுத்த போகிறார்களா அல்லது விசாரணையின் தீவிரத்தை கூறி மேலும் ஒரு தேதி வாங்க உள்ளார்களா என்பது தெரியவரும். ஆனால் வழக்கு தொடுத்த மக்கள் சிவில் உரிமை கழகத்தின் சார்பில் முகிலன் காவல்துறை மற்றும் மணல் மாஃபியாக்கள் அடுத்து ஸ்டெர்லைட் அல்லது கூடங்குளம் ஆலை அதிபர்களால் அல்லது அவர்களது கூலி படையால் கடத்தப்பட்டு இருக்கலாம் எனவும் தற்போது முகிலன் உயிருடன் இருக்கிறாரா என்பதை அரசு மற்றும் போலீஸ் தெளிவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.
காணாமல் போன சுற்றுசூழல் போராளி முகிலன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவாரா அல்லது அவர் உயிருடன் இருக்கிறாரா அவருக்கு என்ன நேர்ந்தது என்பதையெல்லாம் ஆட்கொணர்வு மனு மூலம் போலீசார் பதிலில் தெரியவரும்.