தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடலூரில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடலூரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், தங்கள் உடைமைகளையும் பறிகொடுத்துள்ளனர். வெள்ளம் குறித்து சரியாக அறிவிக்கப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இன்று (19.11.2021) காலையிலிருந்தே கடலூரில் நகரப் பகுதி மட்டுமல்லாமல் தென்பெண்ணை ஆற்றை ஒட்டிய கிராமங்களில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. படகு மூலமாக மீட்புப் படையினர் பொதுமக்களை மீட்டுள்ளனர். ''ஏன் வெள்ளம் குறித்து எச்சரிக்கை கொடுக்கவில்லை... கொடுத்திருந்தால் எங்கள் உடைமைகளைக் காத்திருப்போம்'' என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.