Skip to main content

மாவீரன் பொல்லானிற்கு நினைவுச்சின்னம்: பொல்லான் வரலாறு மீட்பு குழு சார்பில் மனு 

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

ஈரோடு மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள்  வந்து தங்களது கோரிக்கைகளை மனுவாக  கலெக்டர் கதிரவனிடம் கொடுத்தார்கள்.
 

monument for bollaan


அப்படி வந்த ஒரு குழுவினரால் இன்று பரபரப்பு ஏற்பட்டது. பொல்லான் வரலாறு மீட்பு குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் வடிவேலு தலைமையில் வந்தவர்கள் தான் அவர்கள். ஒவ்வொருவரின் கைகளிலும் தாரை, தப்பட்டை வைத்து பலமாக அடித்தவாறு வந்தனர்.

அலுவலக நுழைவாயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 'உள்ளே தாரை தப்பட்டை உடன் செல்ல அனுமதி கிடையாது வேண்டுமென்றால் மனு மட்டும் கொடுங்கள்' என்றனர்.

இதனை தொடர்ந்து  பொல்லான்  மீட்புக் குழுவினர் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். பிறகு அந்த நிர்வாகிகள் கூறும்போது, "கொங்கு மண்டலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த தீரன் சின்னமலையின் போர் படை தளபதியாக  மாவீரன் பொல்லான் இருந்தார். இதனால் ஆத்திரம் கொண்ட ஆங்கிலப் படை பொல்லானை கைது செய்து பிறகு சுட்டு கொன்றது. அப்படிப்பட்ட போர் வீரன் பொல்லான் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள  நல்லமங்காபாளையத்தில் நினைவுச்சின்னம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யக் கோரி பல முறை நாங்கள் மனு கொடுத்துள்ளோம். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 

monument for bollaan


பல போராட்டங்களுக்குப் பிறகு சென்ற 17.7.2019 ஆம் தேதி பொல்லான் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. எனவே நல்லமங்காபாளையத்தில் நினைவுச்சின்னம் கட்ட அரசு நில ஒதுக்கீடு செய்ய வேண்டும் . நாங்கள் சொந்த செலவில் நினைவு சின்னம் கட்ட தயாராக இருக்கிறோம்.

மாவீரன் தீரன் சின்னமலை மற்றும்  அவரது படை தளபதியாக இருந்த பொல்லான் ஆகியோரின் சமூக வேற்றுமையை கருத்தில் கொண்டு அரசு செயல்படக்கூடாது. அதற்காக இந்த அரசின் செவிட்டு காதுகளில் எங்கள் கோரிக்கை பறை முழக்கமாக விழ வேண்டும் என்பதற்காகத்தான் தாரை தப்பட்டை அடித்து வந்தோம் " என்றனர்.

சார்ந்த செய்திகள்