Skip to main content

பணத்துக்காக தம்பி, தம்பி மனைவியை கொன்ற அக்கா... வீ்ட்டின் அருகிலேயே குழி தோண்டி புதைப்பு

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

 

திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவர் மதுரை ஆரப்பாளையம் மேலபொன்னகரத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி வசந்தாமணி (42). இவர்களுக்கு பாஸ்கர் (27) என்ற மகனும், சரண்யா (25) என்ற மகளும் உள்ளனர். இதில் சரண்யாவுக்கு திருணமாகி கணவர் கவுசிக்குடன்(30) தாசநாயக்கனூரில் வசித்து வருகிறார். 
 

Dindigul


 

இந்த நிலையில் பாஸ்கருக்கு திருமணம் பேசி முடித்து வருகிற 1-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருமண பத்திரிகையை உறவினர்களுக்கு செல்வராஜூம், அவருடைய மனைவியும் காரில் சென்று கொடுத்தனர். கடைசியாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தாண்டகுமாரவலசில் உள்ள செல்வராஜின் உடன் பிறந்த அக்காள் கண்ணம்மாளுக்கு (54) கொடுக்க சென்றுள்ளனர். அங்கு பத்திரிகை கொடுத்து விட்டு புறப்படுவதாக செல்போனில், செல்வராஜ் தனது மகன் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின்னர் தம்பதி குறித்து எந்த தகவலும் இல்லை. 

 

Dindigul



இவர்கள் சென்ற கார், கரூர் அருகே கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுக்காலியூரில் அனாதையாக நின்றது. இந்த காரை சுற்றி மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. மேலும் காருக்குள் திருமண பத்திரிகை சிதறிக்கிடந்தன. இதையடுத்து தனது தாய், தந்தையை காணவில்லை என வெள்ளகோவில் போலீசில், பாஸ்கர் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஏற்கனவே பாஸ்கர் கூறிய தகவல் படி, செல்வராஜ் தனது மனைவியுடன் கடைசியாக பத்திரிகை கொடுத்த கண்ணம்மாளிடம் விசாரித்தால் உண்மை தெரியவரும் என்று உத்தாண்டகுமாரவலசில் உள்ள கண்ணம்மாள் வீட்டிற்கு போலீசார் சென்றனர். 

 

Dindigul




அங்கு வீட்டில் இருந்த கண்ணம்மாளிடம் போலீசார் விசாரித்தார். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தனர். மேலும் அவருடைய வீ்ட்டின் அருகே உள்ள புதியதாக தோண்டப்பட்ட குழியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த குழியை தோண்டி பார்த்தபோது அதில் செல்வராஜூ்ம், அவருடைய மனைவியும் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். 


 

 

தொடர்ந்து கண்ணம்மாளிடம் மேற்கொண்ட விசாரணையில், செல்வராஜின் தந்தை காளியப்ப கவுண்டருக்கு சொந்தமான பூமி 4 ஏக்கர் இருந்துள்ளது. இந்த பூமியை செல்வராஜின் மகன் பாஸ்கர் பெயரில் காளிப்பகவுண்டர் உயில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து அந்த 4 ஏக்கர் நிலத்தை ரூ.43 லட்சத்திற்கு செல்வ ராஜ் விற்பனை செய்துள்ளார். அதில் பங்கு வேண்டும் என்று கண்ணம்மாள் கேட்டுள்ளார். ஆனால் செல்வராஜ் பங்கு கொடுக்க மறுத்து விட்டார். எனவே ரூ.5 லட்சமாவது கொடு என்று கண்ணம்மாள் கேட்டுள்ளார். ஆனால் அந்த பணத்தையும் கொடுக்க மறுத்ததோடு ரூ.1 லட்சத்தை மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திமடைந்த கண்ணம்மாள் பாஸ்கரின் திருமண பத்திரிகை கொடுக்க வந்த செல்வராஜியையும், அவருடைய மனைவியையும், மருமகன் நாகேந்திரனுடன்சேர்ந்து, தலையில் அம்மி கல்லை போட்டு கொன்று பிணத்தை வீ்ட்டின் அருகிலேயே குழி தோண்டி புதைத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

 


இதையடுத்து போலீசார் ஈரோடு சென்று நாகேந்திரனையும் பிடித்து வந்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக கண்ணம்மாளின் மகள் பூங்கொடி, நாகேந்திரனின் நண்பர் இளங்கோ ஆகியோரும் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களிடமும் போலீசார் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

 


 

சார்ந்த செய்திகள்