டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ‘ரக்ஷா பந்தன், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படும். சகோதரிகளுக்கு பிரதமர் மோடி வழங்கும் பரிசுதான் இந்த சிலிண்டர் விலை குறைப்பு’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த விலை குறைப்பையும் சேர்த்து 400 ரூபாயை குறைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த விலை குறைப்பு வர்த்தக ரீதியில் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு இன்று (30.09.2023) முதல் அமலுக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விலை குறைப்பின் மூலம் நாடு முழுவதும் 31 கோடி பயனாளர்கள் பயனடைவர்.’ என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது தேர்தல் தோல்வி பயம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள வீடியோவில், ''திருவோணம், ரக்ஷா பந்தன் திருவிழாவை முன்னிட்டு நம்முடைய பிரதமர் மோடி சகோதரிகளுக்கு மிகப்பெரிய பரிசு கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால் வீட்டு உபயோக சிலிண்டருக்கு ஒரு சிலிண்டருக்கு 200 ரூபாய் விலை குறைத்து கேபினட்டில் முடிவு எடுத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இருக்கின்ற உஜ்வாலா திட்டத்தில் இருக்கும் பயனாளிகள் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மேலும் 200 ரூபாய் குறைவு பயன் தருவதாக இருக்கிறது. கூடுதலாக 25 லட்சம் பேருக்கு உஜ்வாலா கனெக்சன் கொடுப்பதற்காக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. மோடி அண்ணனாக, சகோதரனாக சகோதரிகளுக்கு ஓணம், ரக்ஷா பந்தனுக்கு பரிசு கொடுத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.