கோவை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வீதி வீதியாக செல்லும், நடமாடும் காய்கறி வண்டிகள் சேவை திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. 144 தடை காலத்தில் வெளியே வந்து காய்கறிகள் வாங்கிச் செல்வது சிரமமாக இருப்பதால், காய்கறிகள் வாங்க மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனை நிறைவேற்றி வைத்த அமைச்சர் வேலுமணி, "நடமாடும் காய்கறிகள் வண்டிகள் சேவை தொய்வின்றி செயல்பட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சியில், 20 வார்டுகளுக்கு ஒரு மண்டலம் என்ற அடிப்படையில் 5 மண்டலங்கள் இயங்குகின்றன. ஒரு மண்டலத்துக்கு 5 நடமாடும் காய்கறி வண்டிகள் இயக்கப்படும் என்றும், மொத்தம் 25 நடமாடும் காய்கறி வண்டிகள் 5 மண்டலங்களிலும் இயக்கப்படும் என்றும் கோவை மாநகராட்சி அறிவித்து செயல்படுத்து வருகிறது.
18 வகையிலான காய்கறிகள் அடங்கிய ஒரு தொகுப்பின் விலை, 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், நாட்டுத் தக்காளி ஒரு கிலோ, பெரிய வெங்காயம் ஒரு கிலோ, பச்சை மிளகாய் கால் கிலோ, ஒரு தேங்காய், 2 எலுமிச்சை, கத்தரிக்காய் கால் கிலோ, வெண்டைக்காய் கால் கிலோ, புடலங்காய் அரைகிலோ, பீர்க்கங்காய் அரைகிலோ, முருங்கைக்காய் கால் கிலோ, உருளை அரை கிலோ, கேரட் கால் கிலோ, முள்ளங்கி அரை கிலோ, பீட்ரூட் கால் கிலோ, கீரை ஒரு கட்டு, கறிவேப்பிலை ஒரு கட்டு, கொத்தமல்லி ஒரு கட்டு, புதினா ஒரு கட்டு என ஒரு தொகுப்பாக வழங்கி வருகிறது கோவை மாநகராட்சி.
"உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் நடமாடும் காய்கறிகள் திட்டம் கோவை மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் இதை அமல்படுத்த முடிவு செய்துள்ளார் அமைச்சர் வேலுமணி. அதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் " என்கிறார்கள் உள்ளாட்சித்துறை அதிகாரிகள்.