
கடந்த ஜூன் 22- ஆம் தேதி பெங்களூருவைச் சேர்ந்த சுரேஷ் (வயது 22) என்பவர் தனது நண்பர்களுடன் கோவை மாவட்டம், வடுகன்காளிபாளையத்தில் உள்ள வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு இளைஞர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி சுரேஷிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் சுரேஷ் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் வடுகன்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் (வயது 22), மாலிக் பாஷா(வயது 20), இம்ரான்கான் (வயதை 22) என்பதும், இவர்களது நண்பர்களான கோவையை சேர்ந்த சாகர் (வயது 19), விக்ரம்பிரபு (வயது 21), பிரேம்குமார் (வயது 22) ஆகியோர் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மற்றொரு நபரான சக்திவேலை (வயது 23) காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.