தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தங்களது தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக வேளச்சேரி தொகுதியில் தனது கட்சியின் பொதுச்செயலாளரான சந்தோஷ்பாபுவை வேட்பாளராக அறிவித்து, அவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவந்தார். அந்த நிலையில், சில தினங்களுக்கு முன் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் அக்கட்சியின் அண்ணாநகர் வேட்பாளரும், துணைத் தலைவருமான பொன்ராஜ் கரோனா தொற்றால் பாதிக்கப்படிருக்கிறார். இதனை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கரோனா உறுதியானதை பொன்ராஜ் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நான்கு நாட்களாக தொடர் காய்ச்சல் மற்றும் உடல் வலுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன். எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேரில் சந்திக்க முடியாததற்கு வருந்துகிறேன். இருந்தபோதிலும், சமூக வலைதளம், யூடியூப் மூலமாகவும் உங்களை சந்திப்பேன். விரைவில் அண்ணா நகர் தொகுதி மக்களை ‘ஸூம் மீட்டிங்கில்’ சந்திக்க கூடிய விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும்’ என பதிவிட்டுள்ளார்.