எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: ஒபிஎஸ் ஆதரவாளர்கள் வெடிவெடித்து கொண்டாட்டம்!
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.தங்கதமிழ்ச்செல்வன் டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். இவருடன் சேர்த்து 18 எம்.எல்.ஏ.களும் டிடிவி ஆதரவாளர்களாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் டிடிவி ஆதரவாளர்கள் 18 பேரை சபாநாயகர் இன்று பதவி நீக்கம் செய்துள்ளார்.
இதற்கு ஆதரவாக ஆண்டிப்பட்டியில் உள்ள ஒபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த ஒபிஎஸ் ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர்.சிலை அருகே பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
இதுபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு நகர செயலாளரும் ஒபிஎஸ் ஆதரவாளருமான பீர்முகம்மது தலைமையில் காளியம்மன் கோவில் அருகே சபாநாயகரின் தகுதி நீக்கத்திற்கு ஆதரவாக பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். இப்படி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் தகுதி நீக்கத்திற்கு ஆதரவாக பட்டாசு வெடித்து ஆளும் எடப்பாடி அரசை ஆதரித்து வருகிறார்கள்.
- சக்தி