தன்னுடைய தொகுதியில் கண்பார்வை இழந்து தவித்துவந்த இளைஞருக்கு இலவச சிகிச்சை மூலமாக மீண்டும் கண்பார்வையை கொடுத்துள்ளார் மயிலை திமுக மா.செ.வும், எம்.எல்.ஏவுமான மயிலை வேலு. அது மட்டுமில்லாமல் செவி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிகிச்சை, அதற்கான கருவிகள் வாங்கி கொடுப்பது என எண்ணற்ற பல சேவைகளைச் செய்துவருகிறார்.
இது குறித்து அவரிடம் பேசினோம், “ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே, சில பிரச்சனைகள் என நம்மை நாடி வருபவர்களுக்கு ஒரு சில விஷயங்களைச் செய்து கொடுத்தோம். அப்போது மக்கள் மத்தியில் என்.ஜி.ஒ.க்களின் மீது நம்பிக்கையில்லாததாலும், அச்சத்தாலும் அவர்கள் போக மறுக்கின்றனர் என்பதை என்னால் உணரமுடிந்தது.
ஒரு நம்பிக்கை முகம் தேவைப்பட்டது. அது ஏன் நானாக இருக்கக்கூடாது என, நான் மயிலை பகுதியில் எம்.எல்.ஏ.வாக, வந்ததுடன் என்.ஜி.ஒ.க்களை அழைத்து என்னுடைய தொகுதிகளில் உங்களால் என்ன நன்மைகளைச் செய்ய முடியுமோ, அது அத்தனையும் செய்யுங்கள் என்று அழைத்து பேசியதின் விளைவே, பார்வை, செவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி என தற்போது பல உதவிகளை செய்துவருகிறோம்.
அந்த வகையில்தான் கட்சித் தொண்டர் ஒருவர் மூலமாக ஆகாஷ் என்ற தம்பியை அறிமுகப்படுத்தினார்கள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். இவருக்கு ஜெனிடிக்ஸ் பிரச்சனை அதாவது வம்சாவளியாக வரக்கூடிய கண்பார்வை பிரச்சனை இருந்தது. இவருக்கு அறுவை சிகிச்சை செய்து தாருங்கள் என்றனர். உடனடியாக அதற்கான அனைத்து பரிசோதனைகளையும் செய்து அடுத்த சில நாட்களில் கண் அறுவை சிகிச்சையும் செய்து மீண்டும் அந்தத் தம்பிக்கு கண்பார்வை கொண்டுவந்தனர். இனியும் யார் வேண்டுமானாலும் என்ன உதவி வேண்டுமானாலும் என் அலுவலகத்தை நாடினால் நிச்சயம் என்னால் முடிந்த உதவியை செய்துதருவேன்” என்றார்.
சிகிச்சை பெற்ற ஆகாஷிடம் பேசினோம், “என்னுடைய குடும்பத்திற்கே கண்பார்வை பிரச்சனை இருந்து வந்தது. என் அம்மா, அப்பா, என் தம்பி என அனைவருக்கும் இந்தப் பிரச்சனை இருந்துவந்தது. என்னையும் விடவில்லை இந்தப் பிரச்சனை. என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் இருப்பவர்தான் வேலு சாரிடம் அழைத்து வந்தார். அவர் மூலமாக எனக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு தற்போது சிறந்த முறையில் அனைத்தையும் படிக்க, பார்க்க முடிகிறது. நான் இப்போது மிகுந்த சந்தோஷத்தில் உள்ளேன்” என்றார்.