கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ளது மயிலம்பாறை. இங்கு, காட்டுப் பிள்ளையார் கோயில் ஒன்று உள்ளது. இதன் அருகில் நேற்று முன்தினம் (07.02.2021) இரவு ஒரு பெண் தீயில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து காவல் துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மற்றும் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்துபோன அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விழுப்புரம் தடய அறிவியல் நிபுணர் ராஜீவ், சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவர், தனது தாயாரைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் அவர் கூறிய அங்க அடையாளங்களை வைத்து இறந்து போனவர் சோழம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா (வயது 35) என்பது தெரியவந்துள்ளது.
இவரது கணவர் முருகேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட காரணத்தால் இவர் தனது மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வட சிறுவள்ளுர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி, காவல்துறையில் அளித்தப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையிலான போலீசார், பெண்ணை எரித்துக் கொலை செய்த குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மயிலம்பாறை பகுதியில் மர்மமான முறையில் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.