கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ளது மேல்குமாரமங்கலம் கிராமம், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சொந்த ஊர். இந்த கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மகாலட்சுமி, அவரது கணவர் பாலாஜி. கடந்த ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மேல்குமாரமங்கலம் என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழு அமைத்திருந்தார். அந்த குழுவில் உள்ள பாலாஜி, அமைச்சர் சம்பத்தை காணவில்லை என்று வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ளார். அதில் அதிருப்தியடைந்த அப்பகுதி அ.தி.மு.க கிளை செயலாளரும், அமைச்சர் சம்பத்தின் அக்கா மகனுமான ரஜினி என்பவர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் போலீசார் பாலாஜி மற்றும் வாட்ஸ்அப் குழு அட்மின் ஆறுமுகம் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பல மாதங்களாக தேடி வந்தனர். அதேசமயம் இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார், கடலூர் மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கொண்டிருந்த இருவரை பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் மேல்குமாரமங்கலம் சேர்ந்த பாலாஜி(36), ஆறுமுகம்(33) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் சம்பத்தை காணவில்லை என வாட்ஸ் அப்பில் பதிவு செய்தவர்கள் இவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அமைச்சரை விமர்சனம் செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.