திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது மதனாஞ்சேரி கிராமம். இங்கு, டிசம்பர் 19-ஆம் தேதி அரசு மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த அரசு விழா மேடையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் அவரது ஆதரவாளர்களுடன் சென்று கலந்துகொள்ள மேடையேறினார். விழா மேடையில் இருந்த அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அமைச்சர் நிலோஃபர் கபில் ஆகியோரிடம், என் தொகுதியில் நடைபெறும் விழாவில், மேடையில் உள்ள பதாகையில் அமைச்சர்கள் பெயர், கலெக்டர் பெயர் உள்ளது. எதற்காக தொகுதி சட்டமன்ற உறுப்பினராகிய என்னுடைய பெயரை போடாமல் புறக்கணித்துள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, இது அரசு விழா அல்ல, மினி கிளினிக் குறித்து அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மேடை எனக்கூறி சட்டமன்ற உறுப்பினரையும் அவருடன் வந்த நிர்வாகிகளையும் கீழே இறங்குங்கள், இது அரசு விழா மேடை அல்ல, அதிமுக அரசியல் மேடை என அமைச்சர் கே சி வீரமணி கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன சட்டமன்ற உறுப்பினர் அங்கிருந்த செய்தியாளர்களைப் பார்த்து, கேட்டுக்கொள்ளுங்கள். இது அரசு விழா இல்லை என்றும் அரசியல் மேடை என்றும் அமைச்சர் கூறுகிறார். அதிமுக விழா மேடையில், எதற்காக அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மேடையில் இருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பி, விழாவைப் புறக்கணிப்பதாகக் கூறி தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கூடி இருக்க, அரசு விழா மேடையில் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அரசு நிகழ்ச்சியில் அதிகாரிகளுடன் வந்து கலந்துகொண்டவர், சட்டமன்ற உறுப்பினரிடம் இது அதிமுக நிகழ்ச்சி மேடையில் இறங்குங்கள் என ஒருமையில் மிரட்டியது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.
மேடையில் அமைச்சருக்கும் - எம்.எல்.ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, அமைச்சருடன் வந்த அதிமுகவினர் பாதுகாப்புக்கு நின்றிருந்த வாணியம்பாடி பெண் காவல் ஆய்வாளர் மங்கையர்கரசியை கீழே தள்ளிவிட்டு மேடையில் ஏறினர். இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்புக் கூட கேட்கவில்லை அதிமுகவினர்.
இதேபோல் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மிட்டாளம் ஊராட்சிப் பகுதியில் அம்மா கிளினிக் திறப்பதற்காக அமைச்சர் வருவதாக அறிவிக்கப்பட்டு, விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மிட்டாளம் கிராமம் ஆம்பூர் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் வில்வநாதனின் சொந்த ஊராகும். அங்குதான் அவரது வீடும் உள்ளது. எம்.எல்.ஏ ஊரில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவரை முறைப்படி அழைக்கவில்லையாம்.
சொந்த ஊரில் நடைபெறும் விழாவில் நானும் கலந்துகொள்ளப் போகிறேன், மேடையேறுவேன் எனச் சொன்னவுடன் பரபரப்பாகி திமுக மற்றும் அதிமுகவினர் மாறி மாறி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு, திமுகவினரும் அதிமுகவினரும் கட்சிக் கொடிகளை அரசு விழாவில் கட்டினர். இதனால் உடனடியாக ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையில் 3 டி.எஸ்.பி, 2 காவல் ஆய்வாளர்கள், 4 உதவி ஆய்வாளர்கள் என 100 காவலர்கள் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த அமைச்சர் மினி கிளினிக்கை திறந்து வைத்துச் சென்றார்.