பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பகக்த்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியிடம், பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்து மிகவும் பழைய ஹாக்கி டர்ஃப் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் உதயநிதி, “அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு வணக்கம், சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச ஹாக்கி போட்டியாக, ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் 3 அன்று தொடங்கவுள்ளது. இதற்காக எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை தமிழக அரசு ரூ.15 கோடி செலவில் புனரமைத்து வருகிறது. சர்வதேச அளவிலான இப்போட்டிக்காக புதிய ஹாக்கி டர்ஃப்-ஐ அமைக்கவுள்ளோம். மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட டர்ஃப், தேசிய அளவிலான போட்டிகள் மற்றும் பயிற்சிக்காக இன்னும் 7 ஆண்டுகள் வரை பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. ஆகவே, அந்த ஹாக்கி டர்ஃப் வேண்டுமென்று தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்தனர்.
விளையாட்டு வீரர்கள் அதிகம் நிரம்பிய பாளையங்கோட்டை பகுதியிலிருந்தும் அத்தகைய கோரிக்கை வந்தது. எனவே, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு சென்னையிலிருந்த ஹாக்கி டர்ஃப்-ஐ வழங்கினோம். புதியது தான் வேண்டுமெனில் சென்னையிலிருந்து அனுப்பப்பட்ட ஹாக்கி டர்ஃப்-ஐ தேவையுள்ள வேறு மாவட்டத்துக்கு வழங்க தயாராகவுள்ளோம். அதே நேரத்தில், பாளையங்கோட்டையில் புதிய டர்ஃப் அமைக்க ரூ.4 கோடி வரை செலவாகும். அண்ணன் நாகேந்திரன் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை வழங்கினால், மீதி தொகையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக நிச்சயம் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்போம்” எனத் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.