Skip to main content

"எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான், அவர் அப்படித்தான் பேசுவார்" - அமைச்சர் கே.என்.நேரு

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

minister talks about edapadi palanisamy at ob fair mela in trichy

 

திருச்சி கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் ஆகியன இணைந்து நேற்று நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், "திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மாற்றுத்திறனாளிக்கான பிரத்தியேக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 27 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 19 நிறுவனங்கள் திருச்சியை சேர்ந்தவை ஆகும். மேலும் இந்த முகாமில் பதிவு செய்தவர்கள் 154 பேர். இதில் முதற்கட்டமாக 15 நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான சான்றிதழ்களும் அவர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

 

தமிழகத்தில் தற்போது புதிய வகையான காய்ச்சல் பரவி வருகிறது. அதற்கு என்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு பதிலளிக்கையில், "தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இது குறித்து தெளிவாகத் தெரிவித்துள்ளார். தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

 

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு முதலமைச்சரை அவதூறாகப் பேசி வருகிறார். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்ட போது, "ஏற்கனவே அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோன்று எங்களைப் போன்ற முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், நாங்கள் யாரும் ஆர்ப்பாட்டமோ போராட்டமோ நடத்தவில்லை. நீதிமன்றத்தை மட்டும் தான் அணுகினோம். எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான். அவர் அப்படித்தான் பேசுவார்" எனக் கூறினார்.

 

இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்