சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. புதிய பேருந்து நிலையத்திற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்து கிளம்பி வரும் நிலையில், பேருந்து நிலையத்தை முழுமையாக கட்டி முடிக்காமல் திமுக அரசு திறந்து வைத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், ''எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி கொடுத்தபோது, திமுக ஆட்சி வந்த பிறகு புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்றும், பழைய பேருந்துகளைத் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அவருக்கு நான் அன்போடு தெரிவித்துக் கொள்வது, புதிய பேருந்துகள் வாங்கப்பட்ட காரணத்தினால் தான் ஜனவரி 20 ஆம் தேதி தமிழக முதல்வர் 100 புதிய பேருந்துகளை இயக்கி வைத்தார்.
அவர் 100 புதிய பேருந்துகளை துவக்கி வைத்ததற்கு பிறகு 91 பேருந்துகள் ஓட்டத்திற்கு வந்திருக்கிறது. எனவே 191 பேருந்துகள் ஓட்டத்திற்கு வந்திருக்கிறது. கிளம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் குறித்து மீண்டும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்று ஆசியாவின் மிகச் சிறந்த பேருந்து முனையமாக அந்த பேருந்து நிலையம் அமைந்திருக்கிறது. பல்வேறு பத்திரிகைகள் பாராட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவரும் அறிவார். அவருக்கு அதில் சந்தேகம் இருந்தால், அவர் வருவதற்கு நேரம் இருந்தால் நானும் கிளம்பாக்கம் பேருந்து நிலைய துறையான சிஎம்டிஏ துறைக்கான அமைச்சராக இருக்கும் சேகர்பாபுவும் அவரை நேராக அழைத்துக் கொண்டுபோய் பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பதை காண்பிக்க தயாராக இருக்கிறோம்'' என்றார்.