திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ரவளிபிரியா ஆகியோருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “கடந்த பத்தாண்டுகளில் கூட்டுறவுத்துறையில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த துறையாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடுதான் முதல்வர் இந்த கூட்டுறவுத்துறையை எனக்கு கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் மற்ற துறைகளை விட இந்த கூட்டுறவுத்துறையை முதன்மை துறையாக கொண்டு வருவேன். ஏற்கனவே இரண்டு முறை சென்னையில் ஆய்வு கூட்டம் நடத்தி இருக்கிறேன். அதைத்தொடர்ந்து தஞ்சை, மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகியவை மாவட்டங்களில் துறை ரீதியான ஆய்வு பணிகளை நடத்தியிருக்கிறேன். இன்னும் மற்ற மாவட்டங்களிலும் ஆய்வு செய்யவும் இருக்கிறோம்.
அதுபோல் தமிழகத்தில் உள்ள 4,451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், தவறுகள் நடைபெற்று இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறையில் பல குறைபாடுகள் உள்ளன. இதனை சரி செய்து வெளிப்படைத் தன்மையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கியுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆன்லைன் மூலம் இணைக்கப்படவில்லை.
இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் யார், யார் கடன் வாங்கி உள்ளனர் என்பதை ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக முன்னாள் அமைச்சர் நவீன விஞ்ஞானி செல்லூர் ராஜூ தவறான தகவலை தெரிவித்துள்ளார். துறையில் என்ன நடந்துள்ளது என்பது தெரியாமல் பேசியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் நகை கடன் வழங்கியதில் பல முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணமே இல்லாமல் எப்படி கடன் வழங்க முடியும். பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை அட மானம் வைத்து பணம் வழங்கியதாகவும், அதனை தள்ளுபடி செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடான முறையில் தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுறவு சங்க தலைவர்கள் பதவிகளின் நிலை குறித்து சட்டம ன்ற கூட்டத் தொடருக்கு பின்பு முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் சிறந்த துறையாக மாற்றுவதற்காக இந்த துறையை முதல்வர் என்னிடம் தந்துள்ளார். இதனை சிறந்த துறையாக மாற்றுவேன். கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கபடுவர். அதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம், நகை கடன் வழங்க நடவடி க்கை எடுக்கப்பட்டும். அதற்கான நிதியும் ஒதுக்கி கொடுக்கபடும். அதுபோல் கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு நகை வைத்திருப்போர் கடன் தள்ளுபடி என்று முதல்வர் அறிவித்திருக்கிறார்; அதையும் கூடியவிரவில் தள்ளுபடி செய்ய இருக்கிறார்” என்று தெரிவித்தார்.