“பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறிய பட்டாசு ஆலை உரிமையாளர்கள் லாப நோக்கத்தை மட்டுமே வைத்து தொழில் செய்கின்றனர். அதனால் தான் விபத்து ஏற்படுகிறது” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தில் பட்டாசு ஆலையில் 9 பேர் உயிரிழந்ததைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “சிவகாசியில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவது போல அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு நடைமுறைகள் இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய உத்திரமேரூர் திமுக உறுப்பினர் சுந்தர், “பட்டாசு விபத்து சம்பவத்தை அறிந்ததும் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கியுள்ளார். பிரதமரும் உடனடியாக நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் மரகதம் குமாரவேல், “பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் நிவாரணம் போதாது. உயர்த்தி வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பாமக சார்பில் ஜி.கே.மணி, விசிக சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி, த.வா.க. வேல்முருகன், சி.பி.ஐ. சார்பில் மாரிமுத்து, சி.பி.எம் சார்பில் நாகை மாலி ஆகியோரும் இதே வெடிவிபத்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், “பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. இதனால் பொருட்செலவாகும் என கவனத்துடன் செயல்படுகிறார்கள். தொழிலாளர் நலனிலும் அக்கறை காட்டுவார்கள் என்ற ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதுபோன்ற சிறிய பட்டாசு ஆலைகள் லாப நோக்கத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செயல்படுவதால் தான் விபத்து ஏற்படுகிறது. திருவிழாவுக்கு அதிகளவு ஆட்களைக் கொண்டு பட்டாசு தயாரித்ததால் தான் விபத்து ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாத வகையில் அரசு தொடர் நடவடிக்கை மேற்கொள்வதோடு, பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும்.” என்று கூறினார்.