Skip to main content

நாசா விண்வெளி மையத்திற்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவி; அமைச்சர் ஐ. பெரியசாமி வாழ்த்து

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

Minister I. Periyasamy congratulates government school girl who is going to NASA Space Center

 

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையம் நடத்திய அறிவியல் போட்டியில் வெற்றி பெற்று நாசா விண்வெளி மையத்திற்குச் செல்லும் திண்டுக்கல் அய்யம்பாளையம் மாணவி தாரணி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றார்.

 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவி தாரணி. இவர் ஈரோடு அருகே உள்ள இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையம் ஈரோடு ஏ.ஜி.ஆர். கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய அறிவியல் போட்டிகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்த போட்டிகளில் நாசாவுடன் இணைந்து விண்வெளி ஆய்வு மேற்கொள்ளும் கியூபன் இன் ஸ்பேஸ் என்ற அமைப்பு பல்வேறு போட்டிகள் நடத்தியது. இதில் ஏ.ஜி.ஆர். கல்வி அறக்கட்டளையில் பயின்ற 11 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். 

 

சென்னையைச் சேர்ந்த ஏரோலான்ஞ்ச் இந்திய அமைப்பின் பயிற்சியாளர் ஹேமபிரசாத் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். 11 மாணவர்களும் விண்வெளியில் ஊதப்பட்ட மென்ரோபோட்களின் செயல்பாடுகள் குறித்து பகுப்பாய்வு என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆராய்ச்சி திட்டத்தை அனுப்பி வைத்தனர். இந்த திட்டம் கியூபஸ் இன் ஸ்பேஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டு நாசா மூலம் செயல்படத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பரிசோதனை ஜூன் மாதம் 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதிக்குள் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதனால் இந்த திட்டம் சார்ந்து மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களை நாசா விண்வெளி மையம் அழைத்துள்ளது. இதற்காக திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஏழை மாணவி தாரணி அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்குச் செல்கிறார். 

 

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி தனது தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாணவி தாரணியை நேரில் அழைத்து பாராட்டியதோடு நிதியுதவி அளிப்பதாகவும் உறுதியளித்தார். மேலும் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஏழை மாணவி தாரணி அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்குச் செல்வது குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் கூறியதோடு மாணவி மேன்மேலும் அறிவியல் துறையில் மேம்பட வேண்டுமென்று வாழ்த்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்