Skip to main content

"வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது" - அமைச்சர் சி.வி.கணேசன்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

minister cv ganesan talks about north indian labourer safety 

 

திருச்சி மிளகுபாறை பகுதியில் உள்ள அரசு தொழிலாளர் ஈட்டுறுதி (இ.எஸ்.ஐ) மருத்துவமனையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "தமிழக முதல்வரின் உத்தரவுப்படி திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் என மொத்தம் 56 பேர் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனை மிக சுகாதாரத்தோடும் போதிய அளவு தேவையான மருந்துகளும் கையிருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனைக்கு நிகரான ஒரு மருத்துவமனையாக திருச்சி இ.எஸ்.ஐ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பல் மருத்துவப் பிரிவு மிகச் சிறப்பாகச் செயல்படுவதோடு தினமும் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து பயன்பெற்று வருகின்றனர்.

 

அதேபோல் மகப்பேறு மருத்துவத்தைப் பொறுத்தவரை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. நான் ஆய்வு மேற்கொண்ட போது சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்கள் முன்வைத்த கோரிக்கை, மாலை நேரங்களில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. எனவே இங்குள்ள ஜன்னல்களுக்கு கொசுவலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிவுறுத்தியுள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஜன்னல்களிலும் கொசுவலை அமைக்கப்படும். அதேபோல் ஐ.சி.யு என்று சொல்லக்கூடிய தீவிர சிகிச்சை மருத்துவ பிரிவு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் ஒரு வார காலத்திற்குள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

 

தற்போது வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிலாளர்கள் குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் துணையோடு அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஏறக்குறைய 6 லட்சம் வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்துள்ளது.

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பீஹார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஆய்வு குழு சென்னையில் ஐந்து அதிகாரிகள் தலைமையில்  நேரடியாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருக்கக்கூடிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள தொழிலாளர்கள் நாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றும், இந்தப் பாதுகாப்பை உறுதி செய்த தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொழில்நகரங்களில் இருக்கக்கூடிய வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார்.

 

இந்த ஆய்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், இஎஸ்ஐ மருத்துவத் துறையின் இயக்குநர் ராஜமூர்த்தி, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்