கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் திமுக மாவட்ட, மாநகரத் தொண்டரணி சார்பாக நடைபெறும் தலைவர் கலைஞர் புகழ் பரப்பும் திரைப்படக் கலைஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநிலத் தொண்டரணி செயலாளர் மாஸ்டர் பெ. சேகர், திரைப்பட நடிகர் தம்பி ராமையா, கழகச் செயலாளர் மு. மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “நீங்கள் ஓட்டு போட்டீர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம். எந்த திட்டங்களை செயல்படுத்த முன்வந்தாலும், எங்களுக்கு இடையூறு வருகிறது. நாங்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை; நாங்கள் உங்களுக்காக ஒரு திட்டம் கொண்டுவர முடியவில்லை, நாங்கள் கையெழுத்து போட சென்றால் அங்கிருந்து ஒருவர் கையை இழுத்து விடுகின்றனர். நீ கையெழுத்துப் போடக் கூடாது எனக் கூறுகிறார்கள். ஓட்டு போட்டது நீங்க; நம்பி வந்தது நாங்கள்.
வீடு நம் வீடு, வீட்டை கட்டியது நாம், நாம்தான் வீட்டை நிர்வாகம் பண்ண வேண்டும், ஆனால் மத்திய பாதுகாப்புப் படையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவரை வீட்டு காவலாளியாக போட்டு அவர் வீட்டு சொந்தக்காரரை உள்ளே விடாமல் இருந்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது பெரியார் மண், அம்பேத்கர் மண். பேரறிஞர் அண்ணா, கலைஞரின் மொத்த உருவமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளார். நாம் எதை அனுப்பினாலும் கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்புகிறார் ஒருவர். அதை நாம் திருப்பி வலியுறுத்திக் கொண்டே உள்ளோம். எங்க மாநிலத்திற்கான உரிமையை நாங்கள் கேட்கிறோம். மாநிலத்தின் உரிமை என்னவென்றே தெரியாமல், சிலர் செயல்படுகிறார்கள் பேசுகிறார்கள்” என்றார்.
மேலும், “மக்களின் நலன் சார்ந்து அரசாங்கம் நடத்த வேண்டுமே தவிர, யார் பெரியவர் என்பதைக் காட்ட வேண்டிய இடம் சட்டமன்றம் அல்ல. மக்கள் எதை நம்பி நமக்காக ஓட்டு போட்டார்களோ அதற்காக பணியாற்ற வேண்டியதற்காகத்தான் சட்டமன்றம் என்பதைத் தான் தமிழக முதல்வர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்” என்றார்.
இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் ஆர்.ஜி. பாபு, டி.பி.எஸ்.எஸ் ராஜு முகமத், மணிவேல், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் உதயகுமார், மாநகர அமைப்பாளர் தினகரன், மாநகரத் தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் மாவட்ட நகரக் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.