நெய்வேலி சமத்துவபுரம் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் மற்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் ஆகியோர் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனையெடுத்து 400 சதுர அடி கொண்ட 3 அடுக்குகளில் 504 குடியிருப்புகள் ரூ 48.6 கோடி செலவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான சாவியை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் மாநிலத்தில் குடிசையற்ற வீடுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் முன்னாள் முதல்வர் கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி விடற்ற ஏழைகளுக்கு வீடுகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து தற்போதைய முதல்வர் அத்துறையை நகர்ப்புற வாழ்விடம் மேம்பாடு வாரியம் என மாற்றி தற்போது வீடற்றவர்களுக்கு வீடு வழங்கி வருகிறார். அதை மக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த மாவட்டத்தில் ஏழைமக்கள் குடிசை வீடுகளில் மிகவும் மோசமான நிலையை கணக்கில் எடுத்து அவர்களுக்கும் இதுபோன்ற வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசினார். நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் இப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட குடியிருப்புகளை இப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். பயனாளிகள் விரைந்து விண்ணப்பித்து வீடுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இத்திட்டம் பயனாளிகளின் பங்களிப்புடன் கூடியது. பயனாளிகள் இந்த மாவட்டத்தை சேர்ந்தவராகவும் தனது பெயரில் பட்டா, வீடு இல்லாமலும் மாத வருமானம் ரூ 25000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இதில் மாநில அரசு ரூ. 6 லட்சமும் மத்திய அரசு ரூ 1.5 லட்சமும், பயனளி பங்காக ரூ . 2 லட்சம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இதுவரை 105 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 230 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. பயனாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் வங்கிக் கடன் செய்து தரப்படும் என்றார்.
இந்நிகழ்வில் பண்ருட்டி ஒன்றியக் குழு தலைவர் சபா.பாலமுருகன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் காவல் துறையினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.