மே 9ம் தேதி முதல் சுனாமியாய்த் தாக்கும் ‘கோவிட் 19’ இரண்டாம் அலை பரவலைத் தடுக்க மினி ஊரடங்கை (இரண்டு வாரங்களுக்கு) தமிழக அரசு பிறப்பித்தது. அதே சமயம் ஊரடங்கு காலமான இரண்டு வாரத்திற்கு அரசு மதுக்கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் காரணமாக மே 9 அன்றே பெட்டி பெட்டியாகவும், பாட்டில் பாட்டில்களாகவும் மது பாட்டில்கள் வாங்கப்பட்டுப் பதுக்கப்பட்டன. அனேக மது அருந்துவோர், தங்களால் இயன்ற அளவு பாட்டில்களை வாங்கி வைத்தனர். லாக்டவுன் காலத்தில் மது கிடைக்காது என்பதால் அந்தப் பற்றாக் குறையைப் பயன்படுத்தி கருப்புச் சந்தைகளில் மதுபாட்டில்கள் கொள்ளை விலைக்கு விற்கும் நிலையானது. தற்போது அதையும் தாண்டி பூட்டப்பட்ட மதுக்கடைகளையே உடைத்துக் கொள்ளையடிக்கும் நிலை வரை முற்றிப் போயிருக்கிறது.
நெல்லை மாவட்டம், திசையன்விளை பக்கமுள்ள பெட்டைக்குளம், மெயின் சாலையில் இருந்த பூட்டப்பட்ட மதுக்கடையின் சுவரில் துளை போடப்பட்ட ஓட்டையைப் பார்த்த அவ்வழியே சென்றவர்கள், போலீஸுக்கும் டாஸ்மாக் விற்பனையாளர்களான மாடசாமி, ஜெபராஜ் ஆகியோருக்கும் தகவல் கொடுத்திருக்கின்றனர். அதேபோல், டாஸ்மாக் மேற்பார்வையாளர் குமாருக்கும் தகவல் போனது. சம்மந்தப்பட்டவர்கள் தகவலறிந்து அங்கு வந்து பார்க்கையில், மதுக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, திசையன்விளை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கொள்ளை போன மதுக்கடையை ஆய்வு செய்த போலீஸார், மூன்று லட்சத்திற்கும் மேலான மதிப்புள்ள உயர் ரக மதுப்பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்றிருக்கிறார்கள். மேலும் கொள்ளை நடந்த மதுக்கடையின் துளை, அங்கு பதிவாகியிருந்த கைரேகை போன்ற தடயங்களை தடயவியல் வல்லுனர்கள் சேகரித்தனர். கொள்ளையடித்த மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர் போலீஸார்.
தவிர மினி லாக்டவுன் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு திசையன்விளையைச் சுற்றியுள்ள ஒரு கிராமத்தில் மது பாட்டல்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறதாம்.