கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கிராம உதவியாளர்கள் போராட்டம்
சென்னை கலைவாணர் அரங்கில் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நில அளவை அலுவலர்கள் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று காலை நடைபெற்றது.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். கிராம நிர்வாக அதிகாரி சம்பள உயர்வை அறிவித்தார். பேசி முடித்ததும் சங்க நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
அப்போது கிராம உதவியாளர் சங்கத்தினர் எழுந்து திடீரென கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. நாங்கள் சம்பள உயர்வு என்கிற ஒரே ஒரு கோரிக்கை தான் வைத்தோம். ஆனால் எங்களுக்கு முதல்வர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.
இதனால் அரங்கில் பரபரப்பு நிலவியது. கோஷம் எழுப்பியவர்கள் மேடையை நோக்கி முன்னேறினார்கள். அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சமாதானப்படுத்தினார். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. இந்த பரபரப்புக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி மேடையில் இருந்து இறங்கி தலைமை செயலகம் சென்று விட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ராஜகோபால் கூறியதாவது:
நாங்கள் அரசு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான சம்பளத்தை கேட்டு வருகிறோம். அதை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி தந்தனர். ஆனால் வி.ஏ.ஓ.க்களுக்கு மட்டும் சம்பள உயர்வை அறிவித்து விட்டு எங்களுக்கு எதையும் அறிவிக்கவில்லை. அதனால்தான் ஆவேசப்பட்டோம். இப்போது அடிப்படை சம்பளமாக ரூ.6 ஆயிரம் வாங்கி வருகிறோம். அதை உயர்த்தி தருமாறு கேட்கிறோம். இவ்வாறு கூறினார்.
-படங்கள்: ஸ்டாலின்