அதிமுக, அமமுக மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் நேற்று (17.01.2023) தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்ஜிஆரின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே உள்ள எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல் மற்றும் மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அவைத்தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர்கள் அனைவரும் ஓபிஎஸ் முகமூடி அணிந்து வந்திருந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநிலப் பொருளாளரும் திருச்சி மாவட்ட மாநகரச் செயலாளருமான மனோகரன் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, சின்னம்மா பேரவை நிறுவன தலைவரும் மாநில மக்கள் நல கண்காணிப்பு குழு உறுப்பினருமான ஒத்தக்கடை செந்தில் எம்ஜிஆரின் திருவுருவச் சிலைக்கு பாலபிஷேகம் செய்தார். இதேபோன்று பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.