நாகையில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து தனிமாவட்டமாக அறிவித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் சிறப்பு அதிகாரிகள் யாரையும் நியமிக்காமல் புறக்கணிக்கப்படுவது பெருத்த ஏமாற்றமளிக்கிறது என்கிறார் மயிலாடுதுறை தொகுதி எம்.பி ராமலிங்கம்.
தமிழகம் முழுவதும் கரோனா பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், திமுக சார்பாக 'ஒன்றிணைவோம் வா' என்ற இயக்கத்தை தொடங்கி திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அதன் ஒருப்பகுதியாக நாகை மாவட்டம் முழுவதும் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் திமுக சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மருத்துவம் உள்ளிட்ட உதவிகள் கோரி திமுக தலைமையகத்திற்கு வந்த விண்ணப்பங்களை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயரை சந்தித்து மயிலாடுதுறை தொகுதியின் திமுக எம்,பி ராமலிங்கம், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் மதிவாணன் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமலிங்கம், "மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகியும் எந்த வித அடிப்படை முகாந்திரம் இதுவரை தொடங்கவில்லை. மயிலாடுதுறையை தமிழக அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. ஆக மயிலாடுதுறைக்கு மாவட்ட சிறப்பு அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும். கரோனா பரிசோதனை மேற்கொள்ள மயிலாடுதுறை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.