சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டை பணி நியமன ஆணையை வழங்கக் கூறி முற்றுகையில் ஈடுபட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, “முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2,144 காலி பணியிடங்களுக்கு 2018-19 ஆண்டுகளில் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களை 1:2 என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழை சரிபார்த்து முடித்த பிறகு, பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 2018,19,20 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான காலி பணியிடம் நிரப்ப போவதாக தெரிவித்திருந்த நிலையில், 2018 - 19 ஆண்டிற்கான பணிகள் நிரப்பப்பட்டன.
மேலும் 2020 ஆண்டிற்கான 1,910 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு தகுதி தேர்வி்ல் வெற்றிபெற்று, அதற்கான சான்றிதழ் செப்டம்பர் மாதமே சரிபார்க்கப்பட்டு, இன்று வரையிலும் பணி நியமனம் வழங்கவில்லை, இதனால் எங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (02.02.2021) நடக்கவுள்ள நிலையில், அதிலாவது எங்களையுடைய கோரிக்கைகளை இந்த அரசு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் இன்று முதல்வரின் வீட்டின் முன்பு எங்கள் கோரிக்கையை முன்வைத்து முற்றுகையிட வந்தோம்.
எங்களை காவல்துறை தடுத்து நிறுத்திவிட்டனர். ஏற்கனவே நாங்கள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், அவர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு தினங்களில் முதல்வரிடம் ஆலோசனை செய்து பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என்று புலம்புகின்றனர்.