திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசி பெருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள், தங்களது பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வந்தனர். மேலும் திருவிழாவின் ஒரு பகுதியாக, தினமும் மின் தேரில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. வீதி உலா, மாலை 6 மணிக்குத் துவங்கி, இரவு 9 மணிக்கு முடிக்கப்பட்டு வந்தது. கரோனா காலம் என்பதால், அரசின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு திருவிழா நடைபெற்றது.
நேற்று (25.02.2021), அங்குவிலாஸ் மண்டகப்படி மின் தேர் வீதி உலா நடைபெற்றது. வழக்கமாக இவ்விழாவிற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் திரண்டு வருவார்கள். ஆனால், போக்குவரத்து தொழிலாளர்களின் பொது வேலை நிறுத்தம் காரணமாக, கிராமப்புற மக்கள் கோயிலுக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இந்த மின் தேரில் கோட்டை மாரியம்மன் வெண்ணிற பட்டு உடுத்தி சரஸ்வதி கோலம் பூண்டிருந்தார். வழிநெடுகிலும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.