நாடு முழுக்க தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்பது தான். கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தொடர் போராட்டமாக நீடித்து வருகிறது. அதே போல் இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்த கூடாது என தமிழக சட்டசபையில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஈரோட்டில் செல்ல பாஷா வீதியில் இஸ்லாமியர்கள் கடந்த 21ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று 16-வது நாளாக நீடித்தது. இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதைத்தொடர்ந்து நேற்று மாலை போராட்ட களத்தில் வைத்து ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சலீம்பாஷாவுக்கும், மரப்பாலம் பகுதியைச் சேர்ந்த அஸ்விதாவுக்கும் போராட்ட பந்தலிலேயே திருமணம் நடைபெற்றது.
மணமக்களை அங்கிருந்த ஏராளமானோர் வாழ்த்தினர். பின்னர் இனிப்பும், இரவு விருந்தும் போராட்ட பந்தலில் வழங்கப்பட்டது. மணமக்கள் இருவரும் அஞ்சாதே போராடு, வேண்டாம் சி ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி, என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளை கையில் வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று 16-வது நாளாக இஸ்லாமியர்களின் காத்திருப்பு போராட்டம் நீடித்தது. இதில் பெண்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.