விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்திய மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மேலும் சில காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் பலர் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 16 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மீதமுள்ள 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு காவல்துறை பெண் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகிய இரண்டு பேரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகிய மேலும் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கள்ளச்சாராய வியாபாரி அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். எஞ்சிய குற்றவாளிகளை தேடும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கும் 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், சிகிச்சை பெற்று வருவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் அளிக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.