காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய் கிராமங்களில் 164 வருவாய் கிராமங்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளதை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விளமல் பாலத்திலிருந்து பேரணியாக சென்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்டா மாவட்டங்களை உலுக்கிய கஜா புயலால் விவசாயம் முற்றிலும் முடங்கியது. அப்போது பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு, தற்பொது காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை புறக்கணித்து விட்டதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
அதை தொடர்ந்து திருவாரூரில் நேற்று (10/10/2019) விளமல் பாலத்தில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை கண்ட காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை பூட்டி இரண்டடுக்கு தடுப்பு அரண் அமைத்து அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் அங்கேயே அமர்ந்து சுமார் 2 மணி நேரம் முழுக்கமிட்டவாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர், திருவாரூர் ஆர்டிஓ, தாசில்தார், டிஎஸ்பி உள்ளிட்டோர் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரோடு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி விடுபட்டுள்ள அனைத்து கிராமத்திலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதற்கும், குறைவான இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை கஜா புயல் பேரிடராக கருதி, அனைத்து கிராமங்களுக்கும் முழு இழப்பீடு பெற்று தருவதற்கும், அறுவடை ஆய்வறிக்கைகளில் தவறுகள் ஏதேனும் நடைப்பெற்றிருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைப்பதற்கு, அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதோடு தவறுகள் நடைப்பெற்றது உண்மையெனில் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என உறுதியளிக்கப்பட்டது.
மேலும் உழவு மானியம், மானிய விலையில் விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்குவது குறித்து பயனாளிகளின் பட்டியல்கள் கிராமந்தோறும் வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை எற்றுக்கொண்ட விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டனர்.