Skip to main content

கல்லூரி மாணவிகள்- தையல் பயிற்சி மாணவிகள் மோதல்!

Published on 02/12/2017 | Edited on 02/12/2017
கல்லூரி மாணவிகள்- தையல் பயிற்சி மாணவிகள் மோதல்!

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகளுக்கும், தையல் பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கும் ஏற்பட்ட மோதலால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டாட்சியரகத்துக்கு எதிரேயுள்ள கட்டிடத்தின் 2-ம் தளத்தில் கே.எஸ்.பாராமெடிக்கல் கல்லூரி உள்ளது. இதே கட்டிடத்தின் மூன்றாம் தளத்தில் பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இப்பகுதியில் இருந்து 120 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கல்லூரி நிர்வாகம் தையல் பயிற்சி அளித்து வருகிறது. 

பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் உள்ள 2-ம் தளத்தில் பொது கழிப்பறையை தையல் பயிற்சிக்கு வரும் பெண்கள் பயன்படுத்தக்கூடாது எனவும், தையல் பயிற்சி பள்ளியை வேறிடத்துக்கு மாற்றவேண்டும் எனவும் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் பிரச்சனை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கல்லூரி முதல்வர் மெக்டலின் பூங்குழலி பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகளுடன் 3-வது தளத்தில் உள்ள தையல் பயிற்சிப்பள்ளியில் நுழைந்து, அங்கிருந்த பெண்களைத் தாக்கினர். 

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் தையல் பயிற்சி மாணவி சிறுகளத்தூரைச் சேர்ந்த பரமசிவம் மகள் ஆனந்தி (18), கீழகுடியிருப்பு ரமேஷ் மனைவி ராஜேஸ்வரி (30) ஆகியோரும் பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள் நல்லனம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் சுமேதா (18), தேவமங்கலத்தை சேர்ந்த வரதராஜ் மகள் மேனகா (19), கல்லாத்தூர் பாண்டியன் மகள் சுசிலா(19) ஆகியோரும் காயமடைந்து ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இதையடுத்து, தங்களைத் தாக்க வந்த கல்லூரி மாணவிகள் மீதும் கல்லூரி முதல்வர் மெக்டலின் பூங்குழலி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஜயங்கொண்டம் தா.பழூர் சாலையில் வட்டாட்சியரகம் முன் தையல் பயிற்சிப் பள்ளிப் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜீவ்காந்தி, முகமதுநிசார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் கலைந்து சென்றனர்.

- எஸ்.பி.சேகர்

சார்ந்த செய்திகள்