மலேரியா துறையை தனியாரிடம் ஒப்படைக்காதே:
செங்கொடி சங்கம் ஆர்ப்பாட்டம்
மாநகராட்சியில் செயல்படும் மலேரியா துறையை தனியாரிடம் ஒப்படைக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் சார்பில் அம்பத்தூர் மண்டல அலுவலக வாயிலில் வியாழனன்று (ஆக. 17) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். தலைவர் எல்.சுந்தரராஜன், பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலு, துணைப் பொதுச் செயலாளர் முனுசாமி துணைத் தலைவர்கள் ஜனார்தனன், பாரதி, ராஜன், சிஐடியு அம்பத்தூர் பகுதி தலைவர் சு.பால்சாமி, செயலாளர் சு.லெனின்சுந்தர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதுகுறித்து எல்.சுந்தரராஜன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் உள்ள துப்புறவு பணி, மலேரியா உள்ளிட்ட 7 துறைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. தனியாரிடம் சென்றால் குறைந்த சம்பளம்தான் கிடைக்கும். எனவே இடத்தரகர் இல்லாமல் நேரடியாக மாநகராட்சியே சம்பளம் வழங்க வேண்டும். உத்திரபிரதேசத்தில் சமீபத்தில் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாயினர். அங்கே பசுவை பதுகாக்க 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய முதல்வர், ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 65 லட்ச ரூபாயை கொடுத்திருந்தாலே குழந்தைகளின் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும்.
உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி ஆண்டுக்காண்டு குறைக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையை அரசும், அதிகாரிகளும் ஒரு முக்கிய துறையாக கருதுவதில்லை. அதனால்தான் தமிழகம் முழுவதும் டெங்கு தாக்குதலுக்கு உள்ளாகி பலர் இறந்து வருகின்றனர். எனவே முக்கியமான மலேரியா உள்ளிட்ட துப்புறவு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. அப்படி தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அனைத்து தொழிலாளர்களையும் திரட்டி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.
ஸ்வர்ன ஜெயந்தி திட்டத்தில் பணிபுரியும் அனைத்து மலேரியா தொழிலாளர்களுக்கும் தேசிய நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும், தேசிய நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்த 346 ரூபாய் சம்பளம் வழங்குவது போல் மலேரியா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் பிரதி மாதம் 5ஆம் தேதி சம்பளம் வழங்குவதை உத்திரவாதப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற மற்றும் இறந்து போன காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டும் இதுவரை அடையாள அட்டை வழங்கவில்லை, உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மண்டல தலைவர் ஆர்.ஆனந்தராவ் நன்றி கூறினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மண்டல அலுவலர் பாலசுப்பிரமணியிடம் வழங்கினர்.
-அசோக்