சென்னைக்கு அருகே தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (21/02/2021) மக்கள் நீதி மய்யம் கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் டாக்டர்.மகேந்திரன், மாநிலச் செயலாளரும், நடிகையுமான ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொன்ராஜ் கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், "என் மொழி, எனது அடையாளத்தை அழிக்க நினைப்பவர் நல்லவராக இருக்கவே முடியாது. நான் கோபத்தில் அரசியலுக்கு வரவில்லை; மக்கள் அன்பு, அழுகையில் வந்தவன். நினைத்த நேரத்தில் எம்.ஜி.ஆரைச் சந்தித்த என்னால், முதல்வர், பிரதமரைச் சந்திக்க முடியவில்லை. பிரதமரைச் சந்திக்க பலமுறை நேரம் கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க.வில் இருக்கும் நல்லவர்கள் எல்லோரும் மக்கள் நீதி மய்யத்திற்கு வாருங்கள். அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி தான் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி. எம்.ஜி.ஆர். பத்து முறையாவது என் நெத்தியில் முத்தம் கொடுத்திருப்பார். தலைவர் என அழைக்கப்படும் நபர் இன்னும் அரசியலை கவனித்துக் கொண்டிருக்கிறார். வாய்ப்பு இருக்கிறது; என் பின்னால் வாருங்கள் என்று நான் சொல்லவில்லை. வாருங்கள் பணியாற்றுவோம் என்கிறேன்" என நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினியை கமல்ஹாசன் நேற்று (20/02/2021) சந்தித்துப் பேசியிருந்த நிலையில் பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.