நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை அடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
சென்னையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (08/07/2021) மாலை 05.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் டாக்டர் மகேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார்.
அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தேர்தல் அறிவித்த போதே மகேந்திரனை எதிர்பார்த்தேன். கொங்கு மண்டலத்தில் தி.மு.க. எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததை நினைத்து வருத்தப்படுகிறேன். லேட் ஆனாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் தி.மு.க.வில் இணைந்துள்ளனர். தேர்தலுக்கு முன் மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.