திருச்சி அசூரில் எவ்வித அனுமதியுமின்றி இயங்கி வருவதாகக் கூறி ஆக்ஸிஜன் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தமிழ்நேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று (13/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத சில லெட்டர் பேட் அரசியல் கட்சிகள் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுகின்றன. லெட்டர் பேட் கட்சிகளால் மக்கள் பல பிரச்சனைகளைச் சந்திப்பதால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தேவை. 25 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்தால்தான் அரசியல் கட்சி என அனுமதி அளிக்க வேண்டும். புதிய அரசியல் கட்சித் தொடங்க எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்குகிறது? தேர்தல் ஆணையம் எதிர்மனுதாரர்களாக, உள்துறை, சட்டத்துறையைச் சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய தமிழ் நேசன் என்பவருக்கு கண்டனம் தெரிவித்து, பணம் பறிக்கும் நோக்கில் வழக்குத் தொடர்ந்ததாகக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.