தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொளி வாயிலாக உரையாற்றினார்.
அவர் பேசும்போது, "தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள கட்சியல்ல திமுக; தமிழர்களின் இன உரிமையை முன்னேற்றுவதற்காக, தமிழ் மொழியை காப்பதற்காக, தமிழ்நாட்டை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் இது. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை. தற்போது அரசு குறித்து பொய் தகவல் நிறைய வெளியாகி வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அரசு குறித்து நிறைய பொய் தகவலை ஊடகங்களில் கூறி வருகிறார். பொய் சொல்வது எடப்பாடிக்கு கைவந்த கலை. நீட் விவகாரத்தில் தொடங்கி அனைத்திலும் அவர் பொய் கூறிவருகிறார். மக்கள் அவர்களை இந்த தேர்தலிலும் வெளியேற்றுவார்கள். அதிமுக தமிழ்நாட்டுக்கு எப்போதும், இப்போதும் எதுவும் செய்யப்போவதில்லை. உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் படுதோல்வி அடைவார்கள்" என்றார்.