
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளை ஊரகம், நகர்ப்புறம் என இரண்டாகப் பிரித்து ஊரக பஞ்சாயத்துகளுக்கு மட்டும் கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் நடத்தப்பட்டது. புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சிகளுக்கும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அந்த வழக்கின் விசாரணை இன்று (22.06.2021) உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, நிலுவையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், “உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் விடுபட்டுப் போன 9 மாவட்டங்களுக்கான (விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, வேலூர்) உள்ளாட்சித் தேர்தலையும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையும் செப்டம்பர் 15க்குள் நடத்தி முடிக்க வேண்டும். கரோனா பெருந்தொற்றினைக் காரணம் காட்டி தேர்தலை நடத்தாமல் இருப்பது ஏற்புடையதல்ல” என்று உத்தரவிட்டுள்ளது.