முடங்கிப்போன உள்ளாட்சி நிர்வாகம்! வேல்முருகன் குற்றச்சாட்டு
இயங்காது முடங்கிப்போன உள்ளாட்சி நிர்வாகம். முற்றாகவே கெட்டுப்போன சுற்றுப்புற சுகாதாரம். கட்டுப்படுத்தவே முடியாத “ஏடிஎஸ்” கொசுப் பெருக்கம். அதன் காரணமாகவே எங்கு பார்த்தாலும் டெங்கு ஜுரம். சட்டமன்றப் பலம் இன்றி அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பான தகுதியற்ற அரசால்தான் இந்த அவலம் என்று குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்,
இந்தியாவில் டெங்கு காய்ச்சல் அதிகம் பாதித்த இரண்டாவது மாநிலமாக உள்ளது தமிழ்நாடு!
இன்றுவரை தமிழகமெங்கும் சுமார் 10 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது; இதில் சில உயிரிழப்புகளும் நடந்துள்ளன.
கடந்த 2014, 2015, 2016 ஆண்டுகளில் இருந்ததைவிட இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்திருக்கிறது.
பரவலாக எல்லா மாவட்டங்களிலும் டெங்கு இருப்பினும் வழக்கம்போல் நெல்லை மாவட்டத்தில்தான் அதிகமாக இருக்கிறது; அதற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்திப்பது ராமநாதபுரம் மாவட்டம் என்கிறார்கள்.
பெரியவர், சிறியவர் என்ற பேதமின்றி அனைத்து வயதினருமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; பெரும்பாலும் டெங்கு பாதித்த அதிகம் பேர் பள்ளி மாணவர்களும் குழந்தைகளுமே.
ஏடிஎஸ் வகை கொசுக்களின் அபரிமிதமான பெருக்கமே டெங்குக் காய்ச்சல் வர மூலகாரணம் என்கிறார்கள் சுகாதாரத் துறையினர்.
இந்த வகை கொசுக்கள் கட்டுப்படுத்த முடியாதபடி உற்பத்தியானதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.
கொசு ஒழிப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக இல்லாததால்தான் அதனைக் கட்டுபடுத்த முடியாமல் போனது.
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என உள்ளாட்சி அமைப்புகள் யாவும் இயங்காமல் முடங்கிப் போனதால்தான் கொசு ஒழிப்பு நடவடிக்கை தொடரவில்லை.
அவற்றின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தி அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடுவதுதான் சட்டப்படியான வழிமுறை, நடைமுறை.
ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு மத்தியில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிந்ததிலிருந்து ஓராண்டு ஆகியும் இன்னும் தேர்தலை நடத்தியபாடில்லை.
தேர்தலை நடத்தச் சொல்லி உயர் நீதிமன்றம் பல முறை கெடு விதித்தது;, ஆனால் பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோதும் சரி; இப்போது பழனிச்சாமி முதலமைச்சராக இருக்கும்போதும் சரி; அந்தக் கெடுவைப் பொருட்படுத்தியதேயில்லை.
ஒவ்வொரு தடவையும் மாநிலத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாக்குப்போக்குகளைச் சொல்லி அந்தக் கெடுவைத் தட்டிக்கழிப்பதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
காரணம் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கும் நிலையில் பழனிச்சாமி அரசு இல்லை என்பதுதான் உண்மை.
113 எம்எல்ஏக்களின் ஆதரவில் பெரும்பான்மையின்றி, அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பான தகுதியற்ற அரசு என்றுதான் இதைச் சொல்ல முடியும்.
இதனால் செய்ய வேண்டிய காரியம் எதையும் செய்வதற்குத் துப்பின்றி, நடுவண் மோடி அரசின் தயவில் நாட்களைக் கடத்தும் அரசாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப்போனதால் சுற்றுப்புற சுகாதாரமே முற்றாக சீர்கெட்டுப் போனது.
இதனால்தான் கொசுப் பெருக்கம், டெங்கு ஜுரம்!
கொசு ஒழிப்பு நடவடிக்கை இல்லாததே டெங்கு வரக் காரணம் என குற்றம் சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
இதைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையில் இறங்குமாறு அரசைக் கோருகிறது வாழ்வுரிமைக் கட்சி!